மன்னாரில் 3 மைதான நிர்மாணப் பணிகளில் பாரிய ஊழல் மோசடி : வடிவேலுவின் கிணறு காணாமற்போன கதையானது என்கிறார் செல்வம் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2025

மன்னாரில் 3 மைதான நிர்மாணப் பணிகளில் பாரிய ஊழல் மோசடி : வடிவேலுவின் கிணறு காணாமற்போன கதையானது என்கிறார் செல்வம் எம்.பி

வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை மன்னாரில் 3 கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்படி விளையாட்டு மைதானங்களின் நிர்மாணப் பணிகளில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிப்பதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து அந்த மைதானங்கள் அமைக்கும் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (28) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய 3 கிராமங்களிலும் விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் அங்கு மைதானத்தின் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் ஊழல் நடைபெற்றதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதான பணிகள் வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2013 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன், முதற்கட்ட நடவடிக்கையாக மண் நிரப்பும் செயற்பாடுகள் முடிவடைந்துள்ள நிலையிலும் அரங்கு அமைத்தல் மற்றும் புல் பதித்தல் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் மூன்றாம் கட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 51 மில்லியன் அதற்காக பயன்படுத்தப்படவில்லை. அது மீள எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எமில் நகர் மைதானத்தை அமைப்பதற்காக மண் நிரப்புதல், வடிகாலமைப்பு ஏற்படுத்தல் மற்றும் அரங்கு அமைப்பதற்காக ரூ. 49 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அங்கு எதுவும் நடக்கவில்லை. 

கிணறு காணமல் போனதை போன்று இதில் பாரிய ஊழல் நடந்துள்ளது. நிதிகள் பெற்றுக் கொள்ளப்பட்டாலும் வேலைகள் நடக்கவில்லை. இது தொடர்பில் துரித கவனம் செலுத்த வேண்டும். 

அதேவேளை நறுவிலிக்குளம் கிராமத்தில் விளையாட்டு மைதான கட்டுமானத்தில் நீச்சல் தடாகம் உட்புற அரங்கம், 400 மீற்றர் ஓட்டப் பாதை மற்றும் வெளிப்புற வேலைகளுக்காக 37 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கவனம் செலுத்தி இதனை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சபையில் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment