1556 மெற்றிக் தொன் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு : 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீண்விரயம் அம்பலமானது - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2025

1556 மெற்றிக் தொன் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு : 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீண்விரயம் அம்பலமானது

வறிய நிலையிலுள்ள குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உட்பட 1,556 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் காலாவதியாகி, பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெயாங்கொடை பகுதியிலுள்ள அரசாங்க களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது, இந்த உணவுப் பொருட்கள், காலாவதியாகி பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம ஆகியோர் தலைமையிலான குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின்போதே, இவ்வாறு பெருந்தொகையான உணவுப் பொருட்கள் காலாவதியாகி பழுதடைந்த நிலையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு உதவாதவை என்பதால், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியா, கசகஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலக உணவுத் திட்டத்தின் கீழ், கிடைக்கப் பெற்றுள்ள மேற்படி உணவுப் பொருட்களை உரிய காலத்தில் பகிர்ந்தளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியுள்ளமையே அந்த உணவுப் பொருட்கள் காலாவதியாவதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள், மேற்படி களஞ்சியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டு இதன் சிறு தொகையை பாடசாலை மாணவர்களுக்கும் மக்களுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதன் பின்னர் பாடசாலை விடுமுறை ஆரம்பமானதால் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்ததாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.

தற்போது மனித பாவனைக்கு உதவாத அரிசி, பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் 1556 மெற்றிக்தொன் அந்த களஞ்சியசாலையில் காணப்படுவதாக அங்குள்ள ஆவணங்களைப் பரிசோதித்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கம்பஹா மாவட்ட செயலாளருக்கு அறிவிப்பதற்கு பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அத்தனகல உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment