புனித ஹஜ் கடமையில் பங்கேற்கவுள்ளோர் 14 க்கு முன்னர் பதிவு செய்யவும் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2025

புனித ஹஜ் கடமையில் பங்கேற்கவுள்ளோர் 14 க்கு முன்னர் பதிவு செய்யவும்

இவ்வருடம் (2025) இல் புனித ஹஜ் கடமையில் பங்கேற்கவுள்ளவர்கள் இம்மாதம் (பெப்ரவரி) 14ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஹஜ் யாத்திரையின்போது யாத்ரீகர்களுக்கான வசதிகள் குறித்தும் இவ்வருட சேவைகள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவென இம்மாதம் 14ஆம் திகதி வரை சவுதி அரேபிய அதிகாரிகள் காலக்கெடுவை வழங்கியுள்ளனர். இம்முறை 3,500 இலங்கை யாத்திரிகர்களுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. ஹஜ் குழு இவர்களுக்கு வசதியாக WhatsApp குழு ஒன்றை அமைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

3,500 இலங்கை ஹஜ் யாத்திரிகர்களை புனித மக்கமா நகருக்கு அழைத்துச் செல்வதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவதற்கும் இவ்வருடம் 92 ஹஜ் முகவர்களுக்கு அனுமதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு ஹஜ் முகவர்களுக்கும் குறைந்தபட்சம் 20 அல்லது அதிகபட்சம் 41 யாத்திரிகர்களை வழங்க ஹஜ் குழு முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹஜ் பணிகள் அனைத்தும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் உத்தியோகபூர்வ ஹஜ் முகவர்களை தெரிவு செய்யுமாறும் ஹஜ் யாத்திரிகர்கள் சுங்க விதிமுறைகளுக்கு இணங்குமாறும் இலங்கையிலும் நாட்டிற்கு வெளியேயும் பொருட்களை கொண்டு செல்வதில் வழங்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வூடக சந்திப்பில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர் என். நிலுபர், அகில இலங்கை ஹஜ் செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ரிஸ்மி ரியால், இலங்கையின் ஹஜ் சுற்றுலா நடத்துனர் அமைப்பின் தலைவர் ஏ.சி.பி.எம். கரீம், சவுதி அரேபியா Arab News கொழும்பு செய்தியாளர் மொஹம்மட் ரசூல் டீன் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்

No comments:

Post a Comment