(எம்.வை.எம்.சியாம்)
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் மனிதர்கள் எனவும் அவர்களை விலங்குகளை போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற விடுமுறை காலத்தினால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றின் 9ஆம் இலக்க நீதிமன்றின் அனைத்து வழக்குகளும் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன கடமையாற்றும் 3ஆம் இலக்க மன்றுக்கு மாற்றப்பட்டு, அவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சிறைச்சாலையின் அதிகாரிகளால் 40 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் சங்கிலியால் பிணைத்து விலங்கிடப்பட்ட நிலையில் திறந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதனை அவதானித்தபோதே நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் மனிதர்களே. அவர்களை விலங்குகளை போன்று சங்கிலியால் பிணைத்து திறந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வர வேண்டாம் எனவும் அவ்வாறு சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர்களை மனிதர்களாகவும் மதித்து செயற்படுமாறும் சிறைக் கைதிகளை உரிய முறையில் தடுத்து வைக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் திறந்த மன்றில் மன்னிப்பு கோரிய நிலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த கைவிலங்குகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment