(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருள் மீதான 50 ரூபா வரியை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எரிபொருள் இறக்குமதி தரகுப்பணம் இன்றும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கா செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024' தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் இன்றும் பொருளாதார நெருக்கடியில்தான் உள்ளார்கள்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று அனைத்து வாக்குறுதிகளையும் மறந்து விட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024.08.19 ஆம் திகதி கல்கமுவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், எரிபொருள் மீது முறையற்ற வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கு மேலதிகமாக 50 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சிக்கு வந்தவுடன் இந்த 50 ரூபா வரியை நீக்குவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
எரிபொருள் இறக்குமதியின் தரகுப்பணம் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு செல்வாக குற்றஞ்சாட்டப்பட்டது. இன்றும் அந்த தரகுப்பணம் காஞ்சன விஜேசேகரவுக்கா ? செல்கிறது என்று கேட்கிறோம்.
வரிகளை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிலும் வரி அறவிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரிக் கொள்கையையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார்.
அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு நிவாரமணிக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment