(செ.சுபதர்ஷனி)
மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.
நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் திங்கட்கிழமை (27) ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 48 வயதுடைய ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நாய், ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை வழங்கிய தீர்ப்புக்கமையவே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த பெண் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் வழக்கு விசாரணைக்காக கூடிய இணக்க சபையின் மூன்று நீதவான்கள் அடங்கிய குழாத்தினரே நாயை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்துள்ளனர்.
இணக்க சபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு), சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு), கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவருமே இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இணக்க சபையில் இருந்த நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நீதவான்கள் நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், தூக்கிலிடுவது தொடர்பான புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து பேசு பொருளாக மாறியுள்ளது.
அதேவேளை, ஆட்டுக்கு பதிலாக நாயை வழங்கி வைத்த சம்பவம் தொடர்பில் இணக்க சபையினர் மீதும் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஐந்தறிவு ஜீவனுக்கு தூக்கு தண்டனை எதற்கு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரான பெண்ணைக் கைது செய்துள்ளதுடன், 1907ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விலங்குகள் வதை தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment