மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்யவே எந்தக் காரணமும் இன்றி பொதுக் கூட்டங்கள் : பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளது - சமிந்த விஜேசிறி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்யவே எந்தக் காரணமும் இன்றி பொதுக் கூட்டங்கள் : பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளது - சமிந்த விஜேசிறி

(எம்.மனோசித்ரா)

அராங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்தளவுக்கு காணப்படுகின்றது என்பதை மதிப்பீடு செய்வதற்காகவே தற்போது எந்தக் காரணமும் இன்றி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமது பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தாம் ஏற்கனவே கூறிய பொய்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அடுத்து தேர்தலை நடத்துவதுவதா? இல்லையா? என்பதை மதிப்பாய்வு செய்வதற்காக மக்கள் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளார்.

பொய்களுக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை இந்த அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளது.

அரசியல் மேடைகளில் முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதற்கு நீங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

ஊழல், மோசடியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையை வழங்கினர். ஆனால் இன்றும் ராஜபக்ஷர்கள் மீது குற்றம் சுமத்துவதும், குறை கூறுவதும் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தைரியம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காக மீண்டும் மக்கள் மத்தியில் சென்று பொய்களைக் கூற ஆரம்பித்திருக்கிறது. ஆனால் பொய்களுக்கு ஆயுள் குறைவு என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.

உள்ளுராட்சித் தேர்தல் கூட அறிவிக்கப்படாத நிலையில் எதற்காக பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன? அரசாங்கம் இவ்வாறு மழுப்பல் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை அவற்றை நாம் நினைவுபடுத்திக் கொண்டிருப்போம்.

அன்று சீன அபிவிருத்தி திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், தற்போது கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த அந்தத் திட்டங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டு வந்திருக்கின்றன. இவ்வாறான காரணிகளால் தற்போது அரசாங்கம் அச்சமடைந்திருக்கிறது.

அதன் காரணமாகவே எந்தவொரு காரணமும் இன்றி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தமக்கு தற்போதுள்ள செல்லவாக்கு தொடர்பில் மதிப்பீடு செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அமைதியான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதாக அரசாங்கம் கூறினாலும், தினந்தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரிகளை முச்சக்கர வண்டிகள் மற்றும் பேரூந்துகளிலுள்ள மேலதிக பாகங்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment