தேங்காய்களை அவசரப்பட்டு கொள்வனவு செய்ய வேண்டாம் : அரிசி தீர்வுக்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் - அமைச்சரவை பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

தேங்காய்களை அவசரப்பட்டு கொள்வனவு செய்ய வேண்டாம் : அரிசி தீர்வுக்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் - அமைச்சரவை பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு அவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்று நுகர்வோரைக் கேட்டுக் கொள்கின்றோம். தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைந்துள்ளது. இதுவே பணவீக்க வீழ்ச்சியாகும்.

எவ்வாறிருப்பினும் அரிசி விலை தொடர்பில் எவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதில்லை என்பதில் அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது.

நாட்டரிசியை விட சிவப்பு அரிசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

இம்முறை 7 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு நாட்டரிசி பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

70 மெட்ரிக் தொன் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையில் அதனை விட அதிகமாகவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. படிப்படியாக தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு எவரேனும் மோசடிகளில் ஈடுபட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேங்காயின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என்று யாராலும் எதிர்வுகூற முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தோட்ட நிறுவனங்கள் ஊடாகவும், சதொச ஊடாகவும் தேங்காய்களை விநியோகித்துக் கொண்டே இருக்கின்றோம்.

தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு அவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்று நுகர்வோரைக் கேட்டுக் கொள்கின்றோம். எவ்வாறாயினும் நாம் இதனை முகாமை செய்து கொண்டு பயணிக்கின்றோம் என்பது உண்மை.

சில துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் அரசாங்கம் அவற்றுக்கான முழுமையான முயற்சியுடன் தலையிட்டு வருகிறது. இவை பருவ கால பிரச்சினைகளாகும். அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment