மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நோக்கத்திற்காக பிள்ளைகளை பிரிப்பது மாற்றப்பட வேண்டும் - கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நோக்கத்திற்காக பிள்ளைகளை பிரிப்பது மாற்றப்பட வேண்டும் - கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள் தாய், தந்தையர்கள் இருந்தும் கல்வி நோக்கத்திற்காக பிள்ளைகளை பிரித்து சிறுவர் இல்லங்களில் இணைக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். எனவே பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது இறுதியான தீர்வாக காணப்பட வேண்டுமே தவிர முதல் தெரிவாக இருக்கக்கூடாது என கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் றிவானி றிபாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் 51 சிறுவர் இல்லத்தில் 1204 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தால் வழங்கப்படும் சிறுவர்களை பாதுகாத்து பராமரித்து சரியான நடத்தைகளை கண்காணித்து நற்பிரைஜகளாக சமூகத்தில் இணைப்பதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகார சபை சேவையாற்றிக் கொண்டிருக்கின்றது.

தாய் தந்தைகளை இழந்த மற்றும் கைவிடப்பட்ட சிறுவர்களை பராமரிப்பது பிரதான நோக்கமாக இருந்தபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான சிறுவர்கள் கல்வி நோக்கத்துக்காக பெற்றோரின் அன்பில் இருந்து பிள்ளைகளை பிரித்து சிறுவர் இல்லங்களில் இணைக்கப்படும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக 5ஆம் ஆண்டு அல்லது 9ஆம் ஆண்டு பிள்ளைகளுக்கு கல்வி வழங்க முடியாது மற்றும் போக்குவரத்து போன்ற பிரச்சனைகள் காரணமாக சிறுவர் இல்லங்களில் இணைப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது இறுதியான தீர்வாக காணப்பட வேண்டுமே தவிர முதல் தெரிவாக இருக்கக்கூடாது என மேலும் தெரிவித்தார்.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் முரளிதரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ரியாஸ், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபிட்சமாக எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து சிறார்களை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல், சிறார்களுக்கானஉணவு வழங்கள், குரு அபிமானி வேலைத்திட்டங்கள், பாடசாலை இடை விலகள், இள வயது திருமணம், சிறார்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முற்தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டது.

சிறார்களை மேம்படுத்துவதற்கும் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு சிறார்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை சமூகமாக கையாள்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment