இலங்கையின் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டி இன்று - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2025

இலங்கையின் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டி இன்று

உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான இலங்கை அணியின் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய டெஸ்ட் போட்டியான இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலிய அணி 2–1 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இன்று ஆரம்பமாகும் போட்டியை சமநிலை செய்தாலேயே அந்த அணிக்கு தொடரை கைப்பற்றிவிட முடியும். 

மறுபுறம் இந்திய அணிக்கு தொடரை வெல்ல முடியாத நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்க இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

மறுபுறம் லண்டன், லோட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் ஜூனில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை தீர்மானிப்பதிலும் இந்தப் போட்டி முக்கியமானதாக உள்ளது. 

ஏற்கனவே தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் நிலையில் அடுத்த அணியை தீர்மானிப்பதில் அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் தற்போது 5ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தனது இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைப்பதற்கு இன்றைய டெஸ்ட் போட்டி சமநிலை பெறுவது கட்டாயமாகும்.

இன்று ஆரம்பமாகும் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் லோட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுவிடும்.

உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

ஒருவேளை இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டி சமநிலை பெற்றால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் தொடராக அமையும்.

இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெறுவது கட்டாயமாக அமையும்.

உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வென்றாலேயே இறுதிப் போட்டியை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment