வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்களை அகற்ற நடவடிக்கை : கண்காணிப்பு மூலம் விபத்துக்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்களை அகற்ற நடவடிக்கை : கண்காணிப்பு மூலம் விபத்துக்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.சுபதர்ஷனி)

விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையின் நீட்சியாக தற்போது பொது போக்குவரத்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிப்பாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் விபத்துக்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். ஆகையால் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைக்கு எத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன விபத்துக்களின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு கடந்த வருடம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை இதுவரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாகன விபத்துக்களால் பலர் உயிரிழப்பதையும், அங்கவீனர்களாவதையும் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அதன் நீட்சியாக பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள தேவைக்கு புறம்பான மின் விளக்குகள் காரணமாக எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களை வீதியில் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் விபத்துக்கள் சம்பவிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில் வாகனங்களில் பொருத்தப்படும் மேலதிக உதிரிப்பாகங்களினால் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேலதிக உதிரிப்பாகங்களை அகற்ற பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

எவ்வாறெனினும் இந்நடவடிக்கையின் முதல் இரு வாரங்களிலும் சட்டவிரோதமான உதிரிப்பாகங்களை பொறுத்தியுள்ள, வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. ஆகையால் இக்காலப்பகுதியில் அவ்வாறான பாகங்களை அகற்றுமாறு வாகன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

அத்தோடு சிவில் உடையில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி பொது போக்குவரத்து வாகனங்களில் இடம்பெறும் விதி மீறல்கள் தொடர்பில் கண்காணிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் தகவல் கிடைத்த உடன் சீருடையுடன் அவ்விடத்துக்கு வரும் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நாளொன்றில் பதிவாகும் வாகன விபத்துக்கள் 5 ஆக குறைவடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. படுகாங்கள் ஏற்படக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கையும் 10 ஆக குறைவடைந்துள்ளது.

விபத்துக்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். ஆகையால் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைக்கு எத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment