(இராஜதுரை ஹஷான்)
அரச நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும்போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமாயின் நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்த வேண்டும். எவரையும் பழிவாங்கவும், பாதுகாக்கவும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாதென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த அரசாங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்வதற்கும், அரிசி உற்பத்திகளுக்கும் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. அரிசி தட்டுப்பாடு ஏற்படும்போது அரிசி இறக்குமதி செய்து நெருக்கடிகளுக்கு தற்காலிக தீர்வு காண்பதையே பிரதான கொள்கையாக கொண்டிருந்தது.
2024 ஆம் ஆண்டு சிறு மற்றும் பெரும்போக விளைச்சலின்போது 5000 மெற்றிக் தொன் வரையிலான நெல் மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது விவசாய அமைச்சிடம் போதுமான கையிறுப்பு நெல் இருக்கவில்லை
அரசுக்கு சொந்தமான நெற் களஞ்சியசாலைகள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து பெருந்தொகையான நெல் நேரடியாக கொள்வனவு செய்யப்படும்.
அரச நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும்போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.
ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமாயின் நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்த வேண்டும். எவரையும் பழிவாங்கவும், பாதுகாக்கவும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவுடன் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டு அனுதாபத்தை பெற்றுக் கொள்ளவே ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் சமமானதாக செயற்படுத்தப்படும். குற்றமிழைத்திருந்தால் நிச்சயம் தண்டனையனுபவிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை மாத்திரம் நீதி மற்றும் விசாரணை தரப்பினருக்கு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment