இயலாமையை மறைப்பதற்கு செல்லப் பிராணிகளை குறைகூறுவது வெட்கக் கேடு : அநுரகுமாரதான் ஜனாதிபதி என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, January 25, 2025

இயலாமையை மறைப்பதற்கு செல்லப் பிராணிகளை குறைகூறுவது வெட்கக் கேடு : அநுரகுமாரதான் ஜனாதிபதி என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது - நளின் பண்டார

(எம்.மனோசித்ரா)

செல்லப் பிராணிகளுக்கு உணவு வழங்குவதால்தான் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார். மக்களுக்கு அரிசியை வழங்கி அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம், அதன் இயலாமையை மறைப்பதற்கு செல்லப் பிராணிகளை குறைகூறுவது வெட்கக் கேடு. உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும். 48 மணித்தியாலங்களில் அனைத்தையும் மாற்றுவதாகக் கூறியவர்கள் 4 மாதங்கள் கடந்தும் ஒன்றும் செய்யவில்லை.

குறைந்தபட்சம் ரணில் அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களையேனும் இவர்களால் இரத்து செய்ய முடியாதுள்ளது. இதற்காகவா மக்கள் 159 ஆசனங்களை வழங்கினர்?

மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையை வைத்துக் கொண்டு நாட்டுக்குத் தேவையான எந்தவொரு சட்டத்தை இயற்றவும், இரத்து செய்யவும் முடியும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

ரணில் அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் சட்ட ரீதியானவை என்பதால் அவற்றை இரத்து செய்ய முடியாதென அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். அவ்வாறெனில் இன்னும் சிறிது காலம் செல்லும்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடியும் சட்ட ரீதியானது எனக்கூறி அதனையும் கைவிட்டுவிடுவார்கள்.

நாட்டு மக்களுக்கு அரிசியைக் கூட வழங்க முடியாமல் இறுதியில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைக் குறை கூறுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் சென்று உரையாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியைப் போலன்றி முன்னாள் ஜே.வி.பி. தலைவராகவே பேசுகின்றார். அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் வெகு விரைவில் இடம்பெறும். நாம் அதற்கு தயாராகவே இருக்கின்றோம். அந்த தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment