ஆலயங்கள் இப்போது சமூக சேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா நேற்றையதினம் நடைபெற்றது.
மல்லாகத்திலிருந்து அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை வந்தடைந்தது. ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
போர் மற்றும் இடப்பெயர்வுகளின் போதும் அம்மையார் சமூகப் பணிகளை திறம்பட முன்னெடுத்திருந்தார்.
அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்தார்
இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை. இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன.
புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை. இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தனது காலத்தின் பின்னரும் இந்த அறப்பணிகள் தொடர்ந்தும் தடையுறாது முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான ஒருவரான கலாநிதி ஆறுதிருமுருகனை அம்மையார் வளர்த்து அடையாளம் காட்டியுள்ளார்.
(யாழ் விசேட நிருபர்)
No comments:
Post a Comment