சில ஊடகங்களின் பெயரில் வெளிச்சம் இருந்தாலும் அதன் உள்நோக்கம் இருளாக உள்ளது : நிச்சயமாக நாட்டை தூய்மைப்படுத்துவோம் என்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

சில ஊடகங்களின் பெயரில் வெளிச்சம் இருந்தாலும் அதன் உள்நோக்கம் இருளாக உள்ளது : நிச்சயமாக நாட்டை தூய்மைப்படுத்துவோம் என்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டை தூய்மைப்படுத்துவதை சில ஊடகங்கள் விரும்பவில்லை. சில ஊடகங்களின் பெயரில் வெளிச்சம் இருந்தாலும் அதன் உள்நோக்கம் இருளாக உள்ளது. இதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நாட்டு மக்களுக்கு புதிய மாற்றம் தேவைப்பட்டுள்ளது. மக்கள் எமக்கு விசேட மக்களாணையை வழங்கியுள்ளார்கள். அதற்கமைய செயற்படுவோம். நிச்சயமாக நாட்டை தூய்மைப்படுத்துவோம். ஊடகங்களும் தூய்மைப்படுத்தப்படுவது சிறந்தது. ஊடகங்கள் எதை கூறினாலும் நாம் பின்வாங்கப் போவதில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (07) புகையிரத திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் அனைத்து துறைகளையும் சீரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த செயற்றிட்டத்தில் புகையிரத திணைக்களமும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். அதேபோன்று புகையிரத துறையை கட்டியெழுப்ப நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

இந்த துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காணமுடியும். 'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் ஊடாக இந்தத்துறையை மேம்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.

எனினும் நாடு தூய்மைப்படுத்தப்படுவதை சில ஊடகங்கள் விரும்பவில்லை. சில ஊடகங்கள் உள்ளன. அந்த ஊடகங்களின் பெயரில் வெளிச்சம் இருந்தாலும் அதன் உள்நோக்கம் இருளாக உள்ளது. இதற்காக எம்மால் ஒன்று செய்ய முடியாது.

நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்களிடத்தில் கோரவில்லை. ஆனால் நாட்டு மக்களுக்கு புதிய மாற்றம் தேவைப்பட்டுள்ளது. முழுமையாக சுத்தப்படுத்தி எமக்கு விசேட மக்களாணையினை பெற்றுக் கொடுத்துள்ளனர். நாட்டை தூய்மைப்படுத்தவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். நிச்சயமாக இந்த நாட்டை நாம் தூய்மைப்படுத்துவோம்.

ஊடகங்களும் தூய்மைப்படுத்தப்படுவது சிறந்தது. ஊடகங்கள் எதை கூறினாலும் எமது செயற்றிட்டங்களை நாம் நிறுத்தப் போவதில்லை. எமக்கு விசேட மக்களான கிடைத்துள்ளது. அதற்கேற்பவே நாம் செயற்படுவோம்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக போக்குவரத்து தொடர்பிலான விசேட செயற்றிடத்தையும் முன்னெடுத்துள்ளோம். அரசாங்கம் பல துறைகளை போக்குவரத்துடன் இணைத்துள்ளது. எனவே அதன் பயன் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வோம் என்றார்.

No comments:

Post a Comment