(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க முடியும் என்று குறிப்பிட்ட அரசாங்கம் தற்போது 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைப்பது சாத்தியமற்றது என்று குறிப்பிடுவது முறையற்றது. 2022 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமலிருந்திருந்தால் இன்றும் மின் விநியோக துண்டிப்பு தொடர்ந்திருக்கும் என முன்னாள் மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மின் கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை. எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டண திருத்தம் சாத்தியமற்றது என்று சக்திவலு அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து மாற்று வழியில்லை என்று குறிப்பிடுகிறார். ஆகவே மின் கட்டணம் தொடர்பில் மின் சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல,
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையாக ஆதரவளித்தார்கள். தற்போது மின் கட்டண குறைப்பு இல்லை என்று குறிப்பிடுவது முறையற்றது.
மின் விநியோக துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மக்கள் போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி வன்முறை போராட்டமாக மாற்றியமைத்து அரசியல் இலாபம் தேடிக்கொண்டது.
2022 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமலிருந்திருந்தால் இன்றும் மின் விநியோக துண்டிப்பு தொடர்ந்திருக்கும்.
மின் விநியோக கட்டமைப்பு சீர் செய்ததன் பின்னர் கடந்த ஆண்டு 21 சதவீதமளவில் மின் கட்டணத்தை குறைத்தோம். நீர் மின்னுற்பத்தியை அதிகரித்து அதன் உச்ச பயனை மக்களுக்கு வழங்கினோம்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கு சாத்தியமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னரே அரசாங்கத்தை ஒப்படைத்தோம்.
எரிபொருள் இறக்குமதியின்போது 50 ரூபாய் மேலதிக வரி அறவிடப்படுகிறது. அந்த வரியை அப்போதைய மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பெற்றுக் கொண்டார் என்று தேசிய மக்கள் சக்தியினர் குற்றஞ்சாட்டினார்கள். தற்போது அரசாங்கம் மாற்றமடைந்துள்ளது.
காஞ்சன விஜேசேகர அமைச்சரல்ல, ஆகவே அந்த 50 ரூபாய் வரியை நீக்கி அதன் பயனை அரசாங்கம் மக்களுக்கு வழங்கலாம். ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment