மியன்மார் ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் 116 பேர் தொடர்பிலான விவகாரத்தில், நேரில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு விமானப்படை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள சட்ட அதிகாரிகளுக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.
திருகோணமலை நீதிவான் ஜீவரானி கருப்பையா இதற்கான உத்தரவை கடந்த 10 ஆம் திகதி பிறப்பித்தார்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு, திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட 116 ரோஹிங்ய புகலிடக் கோரிக்கையாளர்கள் என கருதப்படுவோர், தற்போது முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்த வழக்கு கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மன்றில் ஆஜராகிய இந்த விடயம் குறித்து விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி, இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் விசாரணைகளுக்கு மேலும் 14 நாட்களை தருமாறும் கோரினார்.
இதன்போது, ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன்களுக்காக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி பிரஷாந்தினி, அனீஸ் மொஹம்மட் ஷாஹில் உள்ளிட்ட குழுவினர், விமானப்படை முகாமில் தடுத்து வக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி மறுக்கப்படுவது தொடர்பில் விடயங்களை முன்வைக்க முனைந்தனர்.
இதன்போதே நீதிவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைகளுக்கு அவகாசமளித்து, இந்த விடயம் தொடர்பில் ஆராய விமானப்படை, குடிவரவு குடியகல்வு திணைக்கள சட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்பி வழக்கை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக மன்றுக்கு இடையீட்டு மனு ஊடாக விடயங்களை முன்வைத்துள்ள விமானப்படை, தொடர்ச்சியாக ரோஹிங்ய அகதிகளை விமானப்படை முகாமில் தங்க வைப்பதால், அவர்களை பார்வையிட அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வந்து செல்ல நேரிடும் எனவும் அவ்வாறான நிலைமை விமானப்படை முகாமின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அது மாறலாம் எனவும் விடயங்களை முன்வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
Vidivelli
No comments:
Post a Comment