(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்துவந்த அரசாங்கம் அதனை நீக்குவதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என கேட்கிறேம். இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நிலையியற் கட்டளை 27 2 இன் கீழ் கேள்வி நேரத்தின் கேள்வி கேட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச் சட்டம் அப்போது நாட்டில் இருந்துவந்த பிரிவினைவாத பயங்கரவாத யுத்தத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.
இன்றாகும்போது 3 தசாப்த கால சிவில் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகியுள்ளபோதும் தொடர்ந்து இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது கேள்விக்குறிய விடயமாகும்.
தற்போது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிர்க்கருத்து கொண்டோர், அரசுக்கு எதிரான போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இலங்கை கையொப்பமிட்ட மற்றும் அதற்கு கட்டுப்பட்ட சர்வதேச சட்டங்கள் தொடர்பிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கருத்து தெரிவித்திருந்தமையால், இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டுவருவதா என்பது குறித்தான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அந்த வகையில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்தின் பதிலை ஏதிர்பார்க்கிறோம்.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சட்டத்தை திருத்துவதற்கோ அல்லது வலுவற்றதாக்குவதற்கோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
அவ்வாறு என்றால் அரசாங்கம் முன்வைக்கும் மாற்றுத் தீர்வு என்ன? அது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?
சிவில் யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இந்த சபைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியுமா?
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் எத்தனைபேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ருக்கிறது. அவர்களில் எத்தனை பேர் குற்றவாளியாக்கப்பட்டிருக்கின்றனர் அதேபோன்று எத்தனை பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று பயங்கரவாத தடைச் சாட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இந்த சட்டத்தின் கீழ் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படுவதற்கும் வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை தடுத்து வைப்பதற்கும் நீதிவான் ஒருவருக்கு கட்டளையிடுவதற்கும் இருக்கும் இயலுமை தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
எதிர்காலத்தில் சர்வதேச சட்டத்துக்கமை இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வரையரைகள் என்ன?
இந்த கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றோம் என்றார்.
No comments:
Post a Comment