(எம்.மனோசித்ரா)
மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடல் மற்றும் எழுச்சி தொடர்பான தகவல்கள் அவர் வசம் காணப்படுமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பினை அதிகரிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு நாட்டில் சிறந்தவொரு வழக்காக அமையும்.
நாட்டின் பாதுகாப்பு சபை கூட அறியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரிடம் காணப்பட்டால் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவதே சிறந்ததாகும். அவை தேசிய பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும்.
புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பாற்பட்ட தகவல்கள் அவர்களிடம் காணப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30534 சதுர அடி மாளிகையிலேயே வசிக்கின்றார். ஒரு ஏக்கரும் 13 பேர்ச் கொண்ட இடமாகும். அது அரசாங்கத்தின் மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கமைய 3357 மில்லியன் ரூபா பெறுமதியுடையதாகும். விஜேராமமாவத்தையிலுள்ள அந்த இல்லம் 46 இலட்சம் மாதாந்த வாடகை பெறக்கூடியது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்த இல்லத்தின் மீள்புனரமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 472.5 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.
2021 இல் 252 மில்லியன் ரூபாவும், 2022 இல் 181.5 மில்லியன் ரூபாவும், 2023 இல் 38.7 மில்லியன் ரூபாவும் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் மொத்த மதிப்பீட்டு பெறுமதியில் இந்த செலவும் சேர்க்கப்பட வேண்டும். தற்போதும் அரசாங்கம் என்ற ரீதியில் பாரியதொரு செலவை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இவ்வாறு அநாவசியமாக பாரியதொரு செலவை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவர்கள் அரசியலமைப்பில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாமறிந்த அரசியலமைப்பில் அவ்வாறானதொரு விடயம் குறிப்பிடப்படவில்லை. சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களிடம் அரசியலமைப்பில் எந்த உறுப்புரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கேட்க விரும்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment