(நா.தனுஜா)
இவ்வருடத்தில் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் 'சுபீட்சத்துக்கான உறுதிப்பாட்டைப் பேணல்' என்பதை இலக்காகக் கொண்டவையாகவே அமையும் என இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் இவ்வாண்டுக்கான கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 க்கும், அதற்கு அப்பாலுக்குமான இலங்கை மத்திய வங்கியின் கொள்கை அறிக்கை புதன்கிழமை (8) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.
அக்கொள்கை அறிக்கையின்படி இவ்வாண்டு முன்னெடுப்பதற்கு மத்திய வங்கியினால் உத்தேசிக்கப்பட்டிருக்கும் முக்கிய நடவடிக்கைகள் வருமாறு, இவ்வாண்டு இலங்கை மத்திய வங்கி 75 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இவ்வருடத்தில் மத்திய வங்கியினால் அவதானம் செலுத்தப்படும் மற்றும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் 'சுபீட்சத்துக்கான உறுதிப்பாட்டைப் பேணல்' என்பதை இலக்காகக் கொண்டவையாகவே அமையும்.
அதேபோன்று நாணயக் கொள்கையானது பண வீக்கத்தை 5 சதவீதமாகப் பேணுவதுடன், நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அமையும்.
கடந்த இரண்டு காலாண்டுகளாகத் தொடரும் பணச்சுருக்க நிலைமை சீரடைந்து இவ்வாண்டின் நடுப்பகுதியில் நேர்க்கணிய எல்லைக்குத் திரும்பும். நிதியியல் நிறுவனங்களுடன் கூட்டிணைந்து, தெரிவு செய்யப்பட்ட உற்பத்திகள் மீதான உயர்வான கடன் வட்டிவீதங்கள் குறைக்கப்படும்.
கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவு கொள்கை வீதத்துடன் ஒத்திசைந்ததாக குறுங்கால சந்தை வட்டி வீதங்கள் வழிநடத்தப்படும். வெளிநாட்டுக் கையிருப்பின் அளவை மீள வலுப்படுத்துவதற்கு அவசியமான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். சந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் அடிப்படை உடன் செலாவணி வீதம் அறிமுகப்படுத்தப்படும்.
எல்லை கடந்த வங்கித் தொழிலை முன்கொண்டுசெல்லும் நோக்கில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுடன் கூட்டிணைவு ஏற்படுத்தப்படும். நிதித் தொழில் சட்டம் மற்றும் நிதிக் குத்தகைக்கு விடும் சட்டம் என்பவற்றுக்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும். அரசாங்க டிஜிட்டல் கொடுப்பனவுத்தளம் தொழிற்படுத்தப்படும்.
எதிர்வரும் காலத்தில் நாட்டு மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் பணவீக்கத்தை குறைந்தளவிலும், நிலையான மட்டத்திலும் பேணுவதற்கு ஏற்றவாறு வட்டி வீதங்கள் கவனமான முறையில் கையாளப்படும்.
இவ்வாண்டில் உள்நாட்டுப் பணச்சந்தைத் திரத்தன்மை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொருத்தமான நாணயத் தொழிற்பாடுகளின் ஊடாக திரவத்தன்மையினை தேவைக்கேற்ப முகாமை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையின் கீழ் நாணயக் கொள்கையை செயற்திறன் மிக்க விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும், வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளை உள்வாங்கும் நோக்குடன் இவ்வருடம் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கான சந்தைநேய முறைமைக்கு மாறுதலடைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடைமுறைக்கணக்கு மிகையொன்று பதிவாகியிருந்த நிலையில், தற்போது பொருளாதாரம் மீளெழுச்சியடைந்து வருவதன் காரணமாக 2025 இல் நடைமுறைக்கணக்கானது பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இவ்வாண்டு வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளின் திட்டமிட்ட தளர்வின் காரணமாக இறக்குமதிச் செலவினத்தில் படிப்படியான மீட்சியொன்று அவதானிக்கப்படக்கூடும்.
மேலும் ஆழமானதும். வெளிப்படையானதும், மேலதிக திரவத்தன்மையுடனான வெளிநாட்டு செலாவணி சந்தையை மேம்படுத்துவதற்கும், செலாவணி வீத இடர்நேர்வுகளை முகாமைத்துவம் செய்வதற்கு ஏதுவான முறைமைகளை உருவாக்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டக்கூடியவாறு அடிப்படை உடனடிச் செலாவணி வீதமொன்றை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment