(செ.சுபதர்ஷனி)
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க ஹோமியோபதி மருத்துவ முறையை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெலிசறை அரச ஹோமியோபதி மருத்துவமனைக்கு அண்மையில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் நோயாளி பராமரிப்பை மேம்படுத்துவது குறித்து அவ்வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் சுகாதார சேவைக்காக பல நிறுவனங்களும், மருத்துவ முறைகளும் பராமரிக்கப்படுகின்றன. குறித்த ஒவ்வொரு துறையும், மருத்துவ முறையும் இந்நாட்டு பிரஜைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதை முதன்மையான இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.
வெலிசரை ஹோமியோபதி வைத்தியசாலை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் தொடர்பில் சிகிச்சையளிப்பதுடன், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள், தோல் நோய்கள், வயிற்று நோய்கள், நரம்பியல் நோய்கள் உள்ளிட்ட பல நோய் நிலைமைகளுக்கும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.
பொதுமக்களுக்கு குறைந்த செலவில் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எளிய மற்றும் இலாபகரமான மருத்துவ முறையாக உள்ள ஹோமியோபதியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மருத்துவமனை பல செயல்திறன் மிக்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஹோமியோபதி வைத்திய சபை என்பது ஹோமியோபதிக்காக நாட்டில் உள்ள ஒரே மருத்துவ அமைப்பாக காணப்படுவதுடன், நாடு தழுவிய ரீதியில் அச்சபையின் கீழ் சுமார் 14 சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.
ஹோமியோபதி என்பது 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மருத்துவ முறையாவதுடன், மேற்கத்திய மருத்துவத்தை அடுத்து உலகில் மிகவும் பிரபலமான மருத்துவ முறையாகவும் உள்ளது.
வெலிசரையில் அமைந்துள்ள ஹோமியோபதி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் தினமும் சுமார் 200 நோயாளர்கள் சிகிச்சை பெறுவதுடன், உள்நோயாளர் பிரிவில் 24 மணி நேர சிகிச்சை வழங்கப்படுகிறது.
பக்கவிளைவுகளின்றி நோயை குணப்படுத்தக்கூடிய ஹோமியோபதி சிகிச்சை முறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க தனித்துவமான காரணிகளை மேம்படுத்தும் நோக்குடன் தற்போதைய அரசாங்கம் சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளாலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேவையான வசதிகளை வழங்கி, இத்துறை சார் வல்லுநர்கள் அளிக்கும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இத்தகைய மருத்துவ சிகிச்சை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment