கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதி : இணைந்து பாேட்டியிட்டதாலே கூட்டுறவுச் சங்க தேர்தல்களில் வெற்றி - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதி : இணைந்து பாேட்டியிட்டதாலே கூட்டுறவுச் சங்க தேர்தல்களில் வெற்றி - ராஜித சேனாரத்ன

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதியை வழங்கியுள்ளது. கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (20) இடம்பெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இதன்போது கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் வகையில் கட்சி ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் அந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று எமது வேலைத்திட்டங்களை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக செயற்பட வேண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகமானவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி எமது கொள்கையை உடைய கட்சி அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது தொர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று கடந்த தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டவர்களையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு, பொது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.

ஆரம்பமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல ஆகியோர் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு சக்தியாக அரசாங்கத்துக்கு முகம்கொடுப்பதே எமது நோக்கம்.

நடைபெற்று முடிந்த அதிகமான கூட்டுறவுச் சங்க தேர்தல்களில் நாங்கள் இணைந்து பாேட்டியிட்டதால், எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதனால் எதிர்வரும் ஏனைய கூட்டுறவு சங்க தேர்தல்களிலும் கூடடணி அமைத்து போட்டியிடவே எதிர்பார்க்கிறோம். இந்த வெற்றி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் தாக்கம் செலுத்தும்.

தற்போது கீழ் மட்ட மக்கள் பிரதான கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அதனால் தலைவர்கள் தற்போது அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.

எனவே ஆரம்பமாக கூட்டணி அமைப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடி பாரிய கூட்டணி அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment