கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பம் : உத்தியோகபூர் இல்லத்தை மீளப் பெறுவது ஜனாதிபதியின் அனுபவமில்லாத செயல் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பம் : உத்தியோகபூர் இல்லத்தை மீளப் பெறுவது ஜனாதிபதியின் அனுபவமில்லாத செயல் - உதய கம்மன்பில

(எம்.ஆர்.எம்.வசீம்)

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தாேல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஹோமாகம, கொரட்டுவ, களனி, போருவளை போன்ற, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற தேர்தல் தொகுதிகளில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதனால் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவுச் சங்கத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாஙகமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளது.

அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது நூற்றுக்கு 20 வீதம் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது.

அதனால் அரசாங்கம் இந்த சரிவை கையால் பிடித்து சரி செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிந்துகொள்ள வேண்டும். மாறாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமே இந்த சரிவை நிறுத்த முடியும்.

அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளி்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வைறாக்கியத்தை பரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை மேலும் இல்லாமல் போகும் நிலையே ஏற்படும்.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர் இல்லத்தை மீளப் பெறுவதாக தெரிவித்திருக்கிறார். இது ஜனாதிபதியின் அனுபவமில்லாமை அல்லது வைறாக்கியத்தில் மேற்கொள்ளும் செயலாகும்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அரச தலைவர்களாக வருபவர்கள், பயங்கரவாதிகள், போதைப் பொருள் கடத்தல் காரர்கள் மற்றும் பாதால உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்த உறுதியான தீரமானங்களை எடுப்பதற்கு பின்வாக்கும் அபாயம் இருக்கிறது.

யுத்தத்தை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதிக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் அதிகாரத்தில் இருந்து சென்ற பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியுமான உத்தியோகபூர் வாசஸ்தலம்  வழங்குவது கட்டாயமாகும் என்றார்.

No comments:

Post a Comment