(செ.சுபதர்ஷனி)
நாட்டில் தற்போது இரத்த புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் 4 பேர் மாத்திரமே உள்ளனர். இத்துறை சார்ந்த உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள வைத்தியர் மீள நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதுடன் இவ்வாறு 9 விசேட வைத்திய நிபுணர்களை இந்நாடு இழந்துள்ளதாக தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் இரத்த புற்றுநோய் மற்றும் இரத்த அணுக்கள் மாற்று விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்தார்.
அத்தோடு சமூகத்தில் உள்ள 5 பேரில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதுடன் 12 பெண்களில் ஒருவரும், 9 ஆண்களில் ஒருவரும் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடலாம் என அண்மைய ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2050 ஆண்டாகும்போது சுமார் 35 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது.
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொற்றாநோய்களின் பட்டியலில் புற்றுநோய் இரண்டாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் உள்ள 5 பேரில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுகிறது.
மேலும் 12 பெண்களில் ஒருவரும், 9 ஆண்களில் ஒருவரும் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடும் என அண்மைய ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் 50 வயதுக்கும் குறைந்த புதிய புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, அவ்வயதினரிடையே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 10 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்.
மாறிவரும் வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்க வழக்கங்கள், மது பாவனை, புகைத்தல் போன்ற காரணங்களால் பலர் புற்றுநோய்க்கு ஆளாகுகின்றனர்.
வருடாந்தம் அடையாளம் காணப்படும் 40 ஆயிரத்துக்கும் அண்ணளவான புற்றுநோயாளர்களில் 4 ஆயிரம் பேர் இரத்த புற்றுநோயாளர்களாவர். அதேபோல் கண்டறியப்படும் சிறுவர் புற்றுநோயாளர்களில் அதிகளவானோர் இரத்த புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
உடல் வெளிறல், திடீரென உடல் மெலிதல், இரத்த சோகை, இரவு நேரங்களில் அதிகளவில் வியர்த்தல் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்படல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படக்கூடும். இதன்போது உடனடியாக தகுதி வாய்ந்த வைத்தியரை நாடுவது நல்லது.
நாட்டில் தற்போது புற்றுநோயாளர்களுக்கு அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிக்சைகள் என்பன உயர்தரமான முறையில் வழங்கப்படுகிறது.
புற்றுநோயாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுத் தருவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நாடளாவிய ரீதியில் கதிர்வீச்சு சிகிச்சைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இச்சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளது.
நாட்டில் தற்போது இரத்த புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் 4 பேர் மாத்திரமே உள்ளனர். அவர்களில் மூவர் தேசிய புற்றுநோய் வைத்தியசாலையிலும், ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் கடமையாற்றி வருகின்றனர்.
இத்துறை சார்ந்த உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள வைத்தியர் மீள நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு 9 விசேட வைத்திய நிபுணர்களை நாம் இழந்துள்ளோம். நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு ஏதுவாக உள்ளது. இத்துறை மாத்திரம் அல்ல ஏனைய வைத்திய துறைகளுக்குக்கும் இது பொருந்தும்.
அத்தோடு எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைக்காக பணம் அறவிடப்படுவதாக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. எனினும் அது உண்மையல்ல.
இலங்கையில் முதன் முதலில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கான எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.
இதுவரை சுமார் 300 எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் வைத்தியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 8 வைத்திய நிபுணர்கள் இருக்க வேண்டிய பிரிவில் தற்போது 4 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர்.
மேற்படி சிகிச்சைக்காக அரசாங்கம் நோயாளர் ஒருவருக்கு 2 தொடக்கம் 5 மில்லியன் ரூபா வரை செலவிடுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று இவ்வாறான சிகிச்சைகளை பெற பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டி ஏற்படலாம்.
ஆகையால் நாடளாவிய ரீதியில் எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவுகளை நிறுவுவதைக் காட்டிலும் தற்போதுள்ள சிகிச்சைப் பிரிவுகளை வலுபடுத்தி தேவையான மனித வளங்களை வழங்குவதன் மூலம், சிகிச்சை சேவைகளை மேலும் அதிகரிக்கலாம்.
அத்தியாவசிய மருந்துப் பட்டியலின் அடிப்படையில் புற்றுநோயாளர்களுக்கு 28 வகையான மருந்து வில்லைகளும், 33 வகையான சிரிஞ்சி மூலம் செலுத்தும் மருந்துகளும் வைத்தியசாலைக்கு விநியோகிக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில காலப்பகுதிகளில் சில வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
கடந்த காலங்களில் 5 வகையான செலுத்தும் மருந்துகளுக்கும் 2 வகையான மருந்து வில்லைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. நிர்வாக பொறிமுறை சார்ந்த பிரச்சனைகளால் இவ்வாறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment