வடக்கு காசாவை நோக்கி ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒரு சிறுமி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நுஸைரத் அகதி முகாமின் மேற்காக உள்ள அல் ஜிசில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை குதிரை வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய செல் குண்டு தாக்குதலில் நாதியா முஹம்மது அல் அமூதி என்ற ஐந்து வயது சிறுமி கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் மூவர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
காசாவில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதாக வபா கூறியது. நுஸைரத்தில் சிக்கிய வாகனம் ஒன்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட புல்டோசர் ஒன்றின் மீதே இஸ்ரேலிய படை குண்டு வீசியுள்ளது.
காசாவில் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டு இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப முயன்றுவரும் நிலையில் இஸ்ரேலிய தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இஸ்ரேலிய இராணுவம் பலமுறை யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் கரம் அபூ சலம் எல்லை கடவை பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் சரமாரி தாக்குதல்களை நடத்தி இருந்தது.
தவிர கடற்கரைக்கு அருகே இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்ததோடு காசாவுக்குள் இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த போர் நிறுத்த மீறல்களுக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலியப் படை நட்சரிம் தாழ்வாரத்தை திறந்ததை அடுத்து பலஸ்தீனர்கள் வடக்கு காசாவை நோக்கி பயணித்து வருகின்றனர்.
இதுவரை 300,000 க்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் தெற்கு காசாவில் இருந்து வடக்கை நோக்கி பயணித்திருப்பதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசா நகரில் இடிந்த கட்டடங்களுக்கு மத்தியில், ‘காசா வரவேற்கிறது’ என்ற பதாகை வீதியில் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது.
‘எனது வாழ்வில் இது மகிழ்ச்சியான தினமாகும்’ என்று பல முறை இடம்பெயர்ந்த பின் காசா நகருக்கு திரும்பிய 22 வயது லமீஸ் அல் இவாதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வடக்கு காசாவுக்கு திரும்பிய மக்கள் அங்கு வெறுமனே இடிபாடுகளையே கண்டுள்ளனர்.
காசாவில் 15 மாதங்களுக்கு மேல் நீடித்த இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் இடிபாடுகளில் சிக்கி இருந்த மேலும் 48 சிதைந்த சடலங்கள் கடந்த இரு தினங்களில் மீட்கப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் அண்மைய இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 11 சடலங்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் மீட்புப் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 47,354 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment