சனல் 4 தொலைக்காட்சி தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பம் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

சனல் 4 தொலைக்காட்சி தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பம் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, சனல் 04 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள் 747 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 100 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் 41 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் 14 குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட தகவல்களையும், விசாரணைகளில் வெளியான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

48 சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, முறையான விசாரணைகள் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment