வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு புகையிரத டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுஹும்பொல பகுதியில் நேற்றையதினம் (22) மாலை, கண்டி பிரிவுக்கான குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒடிஸ்ஸி (Odyssey) புகையிரத பயணத்திற்கான ஒன்லைனில் கொள்வனவு செய்த 21 புகையிரத டிக்கெட்டுகள், அந்த புகையிரத டிக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூ. 130,670 பணம், புகையிரத டிக்கெட்டுகள் விற்பனை செய்த விடயங்களை பதிவு செய்த 130 குறிப்புகள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் உடரட்ட புகையிரதத்தின் எல்ல வரையிலான ஒடிஸ்ஸி (Ella Odyssey) புகையிரத ஒன்லைன் டிக்கெட்டுகளை இலகுவாக ஒன்லைனில் பெறும் வகையில் இணையத்தில் வெளியிட்டு 42 செக்கன்களில் விற்றுத் தீர்ந்துள்ள பாரிய மோசடி தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அண்மையில் வெளிச்சத்துக்கொண்டு வந்திருந்தார்.
அதற்கமைய எல்ல ஒடிஸ்ஸி (Ella Odyssey) புகையிரத டிக்கெட் விற்பனை தொடர்பில் இடம்பெற்று வரும் மோசடி பற்றிய புகையிரத திணைக்களம் CID யில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment