பொதுப் பணம் முறைகேடாக சூறையாடப்பட்டதா? : விசாரணைகளை ஆரம்பித்துள்ள CID - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 25, 2024

பொதுப் பணம் முறைகேடாக சூறையாடப்பட்டதா? : விசாரணைகளை ஆரம்பித்துள்ள CID

ஜனாதிபதி நிதியத்தில் கடந்த காலங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கெதிராக “பொது பணத்தை பாதுகாக்கும் சட்டத்தரணிகள்” அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தது.

குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றிருக்க வேண்டும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சட்டப்படி, தான் குறைந்த வருமானம் ஈட்டுபவர் என பிரதேச செயலாளரின் ஊடாக சான்றளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், “பணம் கோரும் நபரின் மொத்த மாதாந்த வருமானம் குறைவாக இருந்தால் மட்டுமே ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் விடுவிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த பணத்தை பெறுவதற்கான தகுதிகளை உண்மையில் பூர்த்தி செய்தார்களா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

குறிப்பாக, நீதிமன்றம் பணக் கணக்கை முடக்கி வைக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டதையடுத்து, பொருத்தமான நிபந்தனைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதி என்பது பொதுப் பணம் என்பதால், பொய்யான தகவல்களையளித்து அந்தப் பணத்தை அபகரிப்பது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment