அஸ்வெசும கொடுப்பனவு : ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 25, 2024

அஸ்வெசும கொடுப்பனவு : ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு

(எம்.மனோசித்ரா)

ஜனவரி 2025 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடைமுறை குறித்து புதிய வர்த்தமானி வெளியாகியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 21.12.2024 திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இந்த புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 'நிலையற்றவர்கள்' என்ற சமூகப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480,000 நபர்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

மேலும் 'பாதிப்புக்குட்பட்டவர்கள்' என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

'வறியவர்கள்' என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 960,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

'மிகவும் வறியவர்கள்' என்ற சமூகப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17,500 ரூபா வழங்கப்படவுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2 க்கு குறைவாக காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள், முதியோருக்கான கொடுப்பனவுகள் குறித்த விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 410,000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இந்தக் கொடுப்பனவுகள் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன.

2024 மே 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே நலன்புரி நன்மைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட மேலும் பல்வேறு காரணிகளால் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள பயனாளிகள் மேன்முறையீடுகளை சமர்ப்பித்து தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது தகுதிக்கேற்ப 2024 டிசம்பர் 31ஆம் திகதி வரை குறிப்பிட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment