பொதுமக்களை அறிவுறுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 24, 2024

பொதுமக்களை அறிவுறுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(செ.சுபதர்ஷனி)

நத்தார் பண்டிகை மற்றும் எதிர்வரும் புதுவருட பிறப்பை ஒட்டி சுற்றுலாவுக்காக வெளியிடங்களுக்கு செல்வோரும் உறவினர்களுடன் விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரும் தமது பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்தார்.

பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நத்தார் பண்டிகை மற்றும் எதிர்வரும் புதுவருட பிறப்பை ஒட்டி சுற்றுலாவுக்காக வெளியிடங்களுக்கு செல்வோர், விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரும் தமது பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

விசேடமாக கொண்டாட்டக் காலங்களில் பட்டாசு கொளுத்துவதால் பலர் தீ விபத்துகளுக்கு ஆளாகின்றனர். எனினும் இவ்வருடம் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இவ்வாறான தீ விபத்துக்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

இம்முறையும் மேற்படி விபத்துகளை குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக பட்டாசு கொளுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் பெற்றோர் பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பட்டாசு கொளுத்தும்போது கண்களிலும், கைகளிலும் தீ காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கண்களில் காயங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவை பார்வை இழப்புக்கும் வழிவகுக்கலாம்.

போதையிலும் அதிவேகமாகவும் கவனக் குறைவாகவும் வீதியில் வாகனங்களை செலுத்துவதால் கனப்பொழுதில் ஏற்படக்கூடிய விபத்துகளில் பலர் உயிரிழப்பதுடன் மயிரிழையில் உயிர் பிழைப்பார்கள் அங்கவீனர்களாக தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டி ஏற்படலாம்.

ஆகையால் பொதுமக்கள் விபத்துக்களால் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்நாட்களில் வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்கு செல்வோரும் மிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.

விசேடமாக இரவு நேரங்களில் சுற்றுலாக்களுக்கு செல்ல தயாராகும் சாரதிகள் பகல் வேலையில் நன்றாக உறங்குங்கள். வாகனத்தை செலுத்தும்போது நித்திரை ஏற்படின் அது விபத்துக்கு வழிவகுக்கலாம், பண்டிகை காலங்களில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிப்பதற்கு இதுவே பிரதான காரணமாக உள்ளது.

உறவினர்களுடன் விருந்துபசாரங்களில் கலந்துக் கொள்வோர் தேவையற்ற தகராறுகளில் ஈடுபட வேண்டாம். இம்முறை பண்டிகையை உறவினர்களுடன் சமாதானமான முறையிலும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment