(இராஜதுரை ஹஷான்)
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தில் அரசாங்கத்திற்குள் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்ற நிலையில், ஒப்பந்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகின்றமை கவனிக்கத்தக்கது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதற்கு முரணாகவே தற்போது செயற்படுகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது அதானி குழுமம் விவகாரம் மறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான எட்கா உட்பட சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் இந்திய விஜயத்தின் பின்னர் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது பற்றி பேசுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து 2008 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடப்பட்டு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் எட்கா ஒப்பந்தத்துக்கு எதிராக போர் கொடி உயர்த்தியது.
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்ற நிலையில், ஒப்பந்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகின்றமை கவனிக்கத்தக்கது. ஆகவே அரசாங்கம் இவ்விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment