தேசியபட்டியல் ஐந்து உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 16, 2024

தேசியபட்டியல் ஐந்து உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம்

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களான மனோ கணேஷன், மொஹமட் நிசாம் காரியப்பர், முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

அதேபோல் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான பைஸர் முஸ்தபா நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் நாளை தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் 17.66 சதவீத வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களை நேரடியாக பெற்றுக் கொண்டது. இந்த வாக்குகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். மிகுதியான நான்கு தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று .

ஒரு மாத காலத்துக்கு பின்னர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க, மொஹமட் நிசாம் காரியப்பர் மற்றும் முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது ஆகியோரின் பெயர்கள் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர் சின்னம்) பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 4.49 சதவீத வாக்குகளை பெற்றுக் கொண்டது. இந்த வாக்குகளுக்கமைய அக்கட்சிக்கு நேரடியாக 3 ஆசனங்களும், தேசியப்பட்டியல் ஊடாக 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயர் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மிகுதியான ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு புதிய ஜனநாயக முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் பெயரை பரிந்துரைத்தது.

No comments:

Post a Comment