ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்ற பொதுத் தேர்தலில் நமது கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமை கண்டி மாவட்டத்தில் தோல்வியடையச் செய்வதற்கும் சில சக்திகளுடன் இணைந்து சிலர் செயற்பட்டனர். இறைவனின் உதவியால் நமது கட்சி சார்பாக 5 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் பெறுவது நமது சமூகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்
எருக்கலம்பிட்டி விருட்சத்தின் விழுதுகளுக்கான ஒன்று கூடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினர் அக்பர் றியாஸ் தலைமையில் புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவ்வாறு தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாருக், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிக் கிளையின் அமைப்பாளர்கள், வட்டார அமைப்பாளர்கள், போராளிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் 10 ஆவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு நமது கட்சியின் தலைமைக்கும், கட்சிக்கும், நமது மக்களுக்கும் விசுவாசமாக செயல்படுவோம். புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல விடயங்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். எப்போதும் நமது சமூகத்தின் குரலாக செயல்படுவோம்.
மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில்தான் நமது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் மக்கள் மத்தியில் வளர்த்து வந்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடந்த 05 வருட காலமாக எதிர்க்கட்சியில் இருந்துதான் செயற்பட்டது.
பௌத்த மக்களின் புண்ணிய தளம் இருக்கும் கண்டி மாவட்டத்தில் 06 தடவைகள் பொதுத் தேர்தலில் நமது கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் 01 ஆவது இடத்தில் வெற்றி பெற்றார். இம்முறையும் தலைவர் இறைவனின் உதவியால் சதிகளை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார்.
முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காவே நமது கட்சி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நமது கட்சியின் மரச் சின்னத்தில் போட்டியிட்டோம். நமது கட்சியையும், தலைமையையும், நமது மக்களையும் மதிக்காத நிலைமைகள் உருவாகும்போது தனித்து போட்டியிட்டு எமது பலத்தை காட்ட வேண்டும். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டதால் 03 பாராளுமன்ற உறுப்பினர்களை நமது கட்சியில் பெற்றுள்ளோம்.
நமக்கான தேசியப்பட்டியல் உறுப்பினரை பெறுவதற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தோம். இறுதியில் நமது கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் நீதிமன்றத்தினை நாடியதனால் நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது. எமக்கான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நமது கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புனரமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது நமது இளைய புதிய தலைமைகளை அடையாளம் கண்டு நமது கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நமது கட்சியின் மூத்த பிரமுகர்கள் பிரதேச மட்டத்தில் ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து செயல்பட வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலின்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் அரசியல் செயற்பாடுகள் காரணமாக வட கிழக்கு மாகாணத்தில் நமது முஸ்லிம் இளைஞர்கள் சமூக உனர்வோடு சிந்தித்து செயற்பட்டனர். ஆனால் வட கிழக்கு வெளியே நமது முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலானோர் தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயற்பட்ட புதிய நிலைமையை தெரிந்து கொண்டோம்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் நமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தபோது நமது மூத்த தாய்மார்கள் நமது தலைவர்களுக்கும், நமது கட்சிக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தனர். எனவே நமது கட்சி தொடர்பான விழிப்புணர்வுகளை நமது மக்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது என நமது கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கண்டி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வை முதன் முதலாக எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த கட்சி முக்கியஸ்தர்கள் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.
No comments:
Post a Comment