(லோரன்ஸ் செல்வநாயகம்)
இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதனை வைத்து எதிர்க்கட்சி ஊடக கண்காட்சி நடத்த முற்படக் கூடாது எனவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தில் முதல் நான்கு மாதங்களுக்கு அரச சேவையை முன்னெடுத்துச் செல்தல், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தெரிவித்த இணக்கப்பாட்டுக்கு இணங்கவே நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி அதனை சபையில் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த வகையில் அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கு செலவினங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, மேற்படி இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், எனினும் எதிர்க்கட்சியானது இதனை அடிப்படையாக வைத்து ஊடக கண்காட்சியை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தயாசிறி ஜயசேகர எம்.பி அது தொடர்பில் தெரிவிக்கையில், இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் ஏற்கனவே நாம் நிறைவேற்றிய சட்டமூலம் ஒன்றுள்ளது. அந்த சட்டமூலத்தில் முதலில், கை வைத்தவர்கள் நாம். ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நாம் நிறைவேற்றிய சட்டமூலம் உள்ளது.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே இந்த இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
அது தொடர்பில் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவிக்கையில், நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு இருக்குமானால் இதனை நாம் அந்த குழுவில் சமர்ப்பிப்பதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும், நிதி தொடர்பான தெரிவுக் குழு இதுவரை நியமிக்கப்படவில்லை. அது பாராளுமன்றத்தின் பொது நடவடிக்கையே தவிர எமது பிரச்சினையல்ல.
அந்த வகையில் அரசாங்கமானது நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி, செயற்படுகிறது என தெரிவிப்பது தவறாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
No comments:
Post a Comment