(இராஜதுரை ஹஷான்)
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரைகள் மீளாய்வு செய்யப்படுவதுடன், மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் வாரமளவில் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் வினவியபோது இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் மற்றும் தொடர்பாடல் அதிகாரி ஜயநாத் ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மின் கட்டண திருத்தம் குறித்து இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகளை முழுமையாக பரிசீலனை செய்து வருகிறோம். மின்னுற்பத்தி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தரவுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் அபிலாசைகள் கோரப்படும். இதனைத் தொடர்ந்து மின் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.
நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தை எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர வேண்டும் என மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 மற்றும் ஜூலை 15 ஆகிய திகதிகளில் மின் கட்டணத்தை திருத்தம் செய்ய இலங்கை மின்சார சபை ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டிய மூன்றாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.
மூன்றாவது மின் கட்டண திருத்த பரிந்துரையில் மின் கட்டணத்தை நூற்றுக்கு 6 சதவீதத்தால் குறைக்க மின்சார சபை உத்தேசித்திருந்தது.
இருப்பினும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. பரிந்துரைகளின் தரவுகளில் குளறுபடிகள் காணப்படுவதால் அவற்றை திருத்தி சரியான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக்கு அறிவுறுத்தியிருந்தது.
2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார சபை 136 பில்லியன் முதல் 200 பில்லியன் ரூபா வரை இலாபமடைந்துள்ள நிலையில் ஒக்டோபர் மாதம் முன்வைத்த 6 சதவீத கட்டண குறைப்பை புதிய கட்டண திருத்தத்தில் இரத்து செய்துள்ளமை ஆச்சரியத்துக்குரியது.
மொத்த மின்னுற்பத்தியில் 56 சதவீதமளவில் நீர் மின்னுற்பத்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படுகிறது. எரிபொருள் ஊடாக 5 சதவீதம் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment