இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்குங்கள் : அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்தும் சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்குங்கள் : அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்தும் சங்கங்கள்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்துகிறது.

இவ்விடயம் குறித்து தாம் தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத்துறைக்கு 18 வற் வரி அறவிடப்படுவதாகவும், ஏனைய சார்க் நாடுகளில் பூச்சய வீத வற் வரியே அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும், அறிவு மற்றும் கற்றல் தொடர்பான மூலதாரங்களுக்கு வரி விதிப்பதால் ஏற்படுகின்ற நிதியியல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன்த இந்தீவர, "பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்தபோது புத்தகத் துறைக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவத்தவர்கள், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அன்று இவ்விடயத்‍தை எதிர்த்தவர்கள், புத்தகத் துறைக்கு விதிக்கப்படும் VAT வரியை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புத்தகங்கள் மீது வற் வரி விதிக்கப்படுவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதற்காக அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தின்போது எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் " என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க கூறுகையில், "பெரும்பாலான பதிப்பக நிறுவனங்கள் வற் வரியை செலுத்தவதற்கான தகுதியை கொண்டதானவை அல்ல. ஏனெனில், அவர்கள் பாரிய ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை. இதனால், 18 வீத வற் அறவீட்டை கழித்துக் கொள்ளவும் முடியாத துர்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது.

உள்நாட்டு தொழிலாளர்களைத் தவிர, பதிப்பகத் துறைக்கான அனைத்து உள்ளீடுகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இலங்கையின் புத்தகத் துறைக்கு ஏற்கனவே 33.04 சதவீத வரி அறவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதற்கு மேலதிகமாக, 18 சதவீதவற் வரி அறவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, புத்தகங்களின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதுடன், புத்தகத்தை கொள்வனவும் செய்யும் நுகர்வின் அளவும் 30 சதவீதத்தால் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணிகளால் இலங்கையின் புத்தகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அத்துடன், சிறியளவான வர்த்தகர்கள் இத்துறையை விட்டு செல்கின்றனர். இதனால் உள்நாட்டு தொழிலாளர்களும் தமது தொழிற்துறைகளை இழந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இழக்க நேரிடும்.

நாட்டில் புத்தி கூர்மையான மக்களை உருவாக்குவதில் புத்தகத்துறை பெரும் பங்கு வகிக்கிறது என்பதை தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசாங்கம் நம்புகிறது.

இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி வற் வரியை உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என லியுறுத்தி நிற்கிறோம் " என்றார்.

No comments:

Post a Comment