(எம்.மனோசித்ரா)
கச்சதீவை மீளப் பெறுவது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு கோரினால் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அந்த கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமருக்கிடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுவதற்கும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் இணக்கம் காணப்பட்டாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தியிருந்தது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், கச்சதீவு தொடர்பில் இந்திய அரசாங்கம் இதுவரையில் எம்மிடம் எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இந்தியாவிலுள்ள ஒரு அரசியல் கட்சியால் குறிப்பிடும் இவ்வாறான விடயங்களை அந்நாட்டின் நிலைப்பாடாகக் கருத முடியாது. மாறாக மத்திய அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment