உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை நிஜமாக்க தற்போது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் - சரித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை நிஜமாக்க தற்போது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் - சரித ஹேரத்

(எம்.மனோசித்ரா)

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட கடதாசி மாளிகை இன்று அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சாதாரண பிரச்சினைகள் கூட அரசாங்கத்துக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை நிஜமாக்குவதற்காக தற்போது அவர்கள் பாடுபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட கடதாசி மாளிகையால் அவர்களது அரசாங்கத்துக்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை தற்போது உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறே சபாநாயகரின் கல்வித் தகைமை குறித்த பிரச்சினையும் தோன்றியுள்ளது.

இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரிசி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை இப்பிரச்சினை உக்கிரமடைந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

வன விலங்குகளால் விவசாயத்துக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

வன விலங்குகளின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய நடைமுறைகளைப் பின்பற்ற முடியுமா அல்லது வேறு ஏதேனும் நீண்ட கால நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment