சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ? - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ?

பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் விபரத் திரட்டு கோவையில் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கலாநிதி பட்டத்தின் சான்றிதழை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது தவறை ஏற்றுக் கொண்டு கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.

நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் ஒட்டு மொத்த மக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் கடந்த வாரம் 'சபாநாயகர் தனது கலாநிதி பட்டம் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும்' என பதிவேற்றம் செய்திருந்தார்.

அதேபோல் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட ஒரு சில பேராசிரியர்கள் மற்றும் சிவில் அமைப்பினர்கள் சபாநாயகரின் கலாநிதி பட்டத்தை சவாலுக்குட்படுத்தி தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறான பின்னணில் பொது நிகழ்வில் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் வினவியபோது தன்னிடம் இரண்டு கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சபாநாயகரின் கலாநிதி பட்டம் அரசியல் களத்தில் பிரதான பேசு பொருளானதன் பின்னர் பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பாராளுமன்றத்தில் விபரக்கோவை பகுதியில் 'கலாநிதி கௌரவ அசோக சபுமல் ரன்வல' என்ற பதிவு நீக்கப்பட்டு 'கௌரவ சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற ஊடக பிரிவு 2024.11.21 ஆம் திகதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் 'அசோக சபுமல் ரன்வல, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் தொடர்பான பொறியியல் பட்டத்தையும், ஜப்பானின் வஷேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொடர்பில் கலாநிதி பட்டத்தை முழுமைப்படுத்தியுள்ளதாக' குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து ஒன்று சபாநாயகர் தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல ஜப்பான் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்ததாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. நாட்டு மக்களுக்கு தவறான கல்வி தகைமையை குறிப்பிட்டுள்ளமை ஒழுக்கமற்றது. ஆகவே சபாநாயகர் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உண்மையுடன் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகர் தொடர்பான விபர படிவத்தில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தின் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கல்வித் தகைமை குறித்து இன்னும் ஓரிரு தினங்களின் சபாநாயகர் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment