டில்லியிலிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

டில்லியிலிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின்போது முக்கிய இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. பேச்சுவார்த்தைகளின்போது அவதானம் செலுத்தப்படும் விடயங்கள், எட்டப்படும் இணக்கப்பாடுகள் குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது ஜனாதிபதியின் இந்திய விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பியபோது, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.

அவருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட தூதுக்குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது.

எனினும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ள விடயங்கள், கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து டில்லியிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும்.

விஜயத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment