சந்தேகநபரை விடுவிக்க பொலிஸாருக்கு அழைப்பு எடுத்த குற்றவாளி கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

சந்தேகநபரை விடுவிக்க பொலிஸாருக்கு அழைப்பு எடுத்த குற்றவாளி கைது

முல்லேரியா பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போன்று தம்மை அடையாளப்படுத்தி கடந்த டிசம்பர் மாதம் 01ஆம் திகதி அழைப்பை மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பு பற்றி முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்து அழைப்பை எடுத்த நபர் பொலிஸ் அதிகாரி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதற்கமைய, குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை (06) முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்ல பிரதேசத்தில் குறித்த அழைப்பை எடுத்த சந்தேகநபரை 10.4 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 52 வயதுடைய காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெற்று மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் குறித்த சந்தேகநபர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தெல்கொட பிரதேசத்தில் உள்ள தங்க நகை நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டுவரும் சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்கு கொள்ளையடித்த தங்க பொருட்களை பல்வேறு இடங்களில் அடமானம் வைத்துள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், குறித்த கொலைச் சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்த மேலுமொரு சந்தேகநபரை நேற்று (10) களனிமுல்ல பிரதேசத்திற்கு வரவழைத்து முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 53 வயதான பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து, கொள்ளையிடப்பட்ட 3 தங்க மாலைகள் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த மாலையை அறுத்துக் கொண்டு ஓடிய சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முல்லேரியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment