(எம்.மனோசித்ரா)
மூடீஸ் ரேட்டிங் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. ஆனால் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் பிரதிபலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக பொய் கூறி ஏமாற்றியிருக்கின்றனர் என்பதை இப்போதாவது தேசிய மக்கள் சக்தியினர் உணர்ந்திருப்பர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடனை மீளச் செலுத்த முடியாத நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மையில் மகிழ்ச்சிக்குரியவையாகும். மூடீஸ் ரேட்டிங் நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது.
அரசாங்கத்துக்கு கடனை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டமையானது தனியார் துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அதானி நிறுவனம் கூட அதன் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதிலிருந்து பின்வாங்கியது.
எவ்வாறிருப்பினும் சர்வதேச சந்தையில் கடன் பெறக்கூடிய தரப்படுத்தலை நாம் அண்மிக்கவில்லை. அதற்கு மூடீஸ் ரேட்டிங் தரப்படுத்தலில் டீடீடீ நிலைக்கு வர வேண்டும். அந்த நிலைமையை அடைவதற்கு பொருளாதாரம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களாலேயே இந்த பிரதி பலன் கிடைத்துள்ளது.
தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டதைப் போன்று கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை இரத்து செய்து, கடன் மறுசீரமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் இந்த பலனைப் பெற்றிருக்க முடியாது.
அதற்காக அவர்கள் கூறியதைப் போன்று ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. இதனை செய்ய முடியாது எனத் தெரிந்து கொண்டும், தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் பொய் கூறி அவர்களை தேசிய மக்கள் சக்தி ஏமாற்றியிருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகின்றேன்.
ஆனால் நாம் எதனை செய்ய முடியும், எதனை செய்ய முடியாது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியின் ஒழுக்கம் இங்கு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. தாம் பொய் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றோம் என்பது தேசிய மக்கள் சக்தியினரின் மனசாட்சிக்கு தெரியும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 10 நாட்களுக்குள் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
10 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் இராணுவத்தினர் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஒளிப்பதிவை நிறுத்திவிட்டு கூறினார். ஆனால் இதுவரை எதுவும் நடந்தபாடில்லை என்றார்.
No comments:
Post a Comment