ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை அறவிட நீதிமன்றத்தை நாடுவோம் : ஆட்சியாளர்கள் தமது விருப்பத்துக்கமைய மக்கள் வரிப் பணத்தை வீணடிக்க முடியாது - டலஸ் அலகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Monday, December 9, 2024

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை அறவிட நீதிமன்றத்தை நாடுவோம் : ஆட்சியாளர்கள் தமது விருப்பத்துக்கமைய மக்கள் வரிப் பணத்தை வீணடிக்க முடியாது - டலஸ் அலகப்பெரும

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவழித்த 72 கோடி ரூபாவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அறவிடுமாறு வலியுறுத்தி சிவில் பிரஜை என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை நாட எதிர்பார்த்துள்ளோம். அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை கருத்திற் கொள்ளாமல் சிறந்த எடுத்துக்காட்டுக்காக செயற்பட வேண்டும். ஆட்சியாளர்கள் தமது விருப்பத்துக்கு அமைய மக்களின் வரிப் பணத்தை வீண்விரயமாக்க முடியாது என சுட்டிக்காட்டி சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உத்தேச உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் சகல அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் தோல்வியை தடுப்பதற்காகவே 2023 ஆம் ஆண்டு நடத்த உத்தேசித்திருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்கி தேர்தல் வாக்கெடுப்பை பிற்போட்டார்.

பிற்போடப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 720,000,000 ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய நியாயமற்ற வகையில் இவ்வாறு அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளமை முறையற்றது.

ஆட்சியாளரின் தோட்ட வருமானத்தில் இருந்தோ அல்லது குடும்ப சொத்தில் இருந்தோ இந்த நிதி கிடைக்கப் பெறவில்லை. மக்களின் வரிப் பணமே இவ்வாறு வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

திறைசேரி வசமிருந்த 72 கோடிக்கு மேலதிகமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்த 80,672 வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவு செய்த நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. இவற்றை மதிப்பிட முடியாது. இதற்கு மேலதிகமாக கட்டுப்பணமாக 18 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, சீனி வரி மோசடி, விசா வழங்கல் மோசடி போன்ற அரசியல் ஆதரவுடன் இடம்பெற்ற மோசடிகளுடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மோசடியையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை கருத்திற் கொள்ளாமல் இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு தண்டனை வழங்க வேண்டும்.

அரச வரிகளை செலுத்த முடியாமல், கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு எத்தனையோ பேர் இந்த நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் மக்களின் வரிப் பணத்தை நியாயமற்ற வகையில் வீண்விரயம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சமூக பொறுப்பாகும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவழித்த 72 கோடி ரூபாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஆட்சியாளரிடமிருந்து அறவிடுமாறு வலியுறுத்தி சிவில் பிரஜை என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை நாட எதிர்பார்த்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்துகிறோம்.

தனது தவறான தீர்மானத்தால் வீண்விரயமாக்கப்பட்ட பெருமளவிலான நிதியை மீள செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு போதுமான காலம் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment