சவூதி அரசின் ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப் போட்டி : இலங்கையில் வருடந்தோறும் நடாத்துவதற்கும் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

சவூதி அரசின் ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப் போட்டி : இலங்கையில் வருடந்தோறும் நடாத்துவதற்கும் இணக்கம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதரகத்தினூடாக சென்ற வருடம் நடாத்திய அல்குர்ஆன் மனனப் போட்டி போன்று இம்முறையும் மிகப் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது..

அந்த வகையில், குறித்த போட்டியின் இரண்டாவது கட்டம் 2025 ஆம் ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்புதாரர்களை கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்கு அழைத்து, அது குறித்து பேச்சு வார்த்தைகளை நேற்று (05) செவ்வாய்க்கிழமை நடத்தினார்.

இக்கலந்துரையாடலானது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸின் மேற்பார்வையின் கீழ் முதற் கட்டமாக இடம்பெற்றது.

இதன்போது திணைக்களத்தின் சார்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மதப் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் மற்றும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். முப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டிகான தெரிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதரகத்தினூடாக வரலாறு காணாத மாபெரும் அல்குர்ஆன் மனனப் போட்டியொன்று கடந்த 2023 ஜுன் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள Movenpick Hotel லில் நடத்தி, அதன் பரிசில்கள் வழங்கும் விழாவை ShangriLa Hotel இலும் வெகு விமர்சையாக நடத்தி முடித்ததோடு மட்டுமல்லாமல், குறித்த போட்டி வருடா வருடம் நடைபெற வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி அரேபியாவின் முஸ்லிம் விவகார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதை வருடா வருடம் நடத்துவதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போட்டியானது இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment