கன்னி வரவு செலவுத் திட்டத்தை மார்ச் மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2024

கன்னி வரவு செலவுத் திட்டத்தை மார்ச் மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளின் பின்னர், மேலதிக உறுதிப்பாடுகளுக்காக பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடத்திலேயே இலங்கைக்கு கிடைக்கப் பெறும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது. இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான நிதி மூலாதாரத்தை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தவில்லை.

அதேபோன்று உரம் நிவாரணம் வழங்கியமை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார சூழல், ஒப்பந்தத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்யவும், மூன்றாவது மீளாய்வை பற்றி கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

இந்த விஜயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த உடன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன.

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்மைய மேக்ரோ பொருளாதாரப் போக்குகள் வளர்ச்சியை காட்டுகிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக மூன்று தவணைகள் அதிகரிப்பை காட்டியுள்ளதுடன் குறைந்த பணவீக்கம், அதிகரித்த அரச வருவாய் சேகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை மீட்பதில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment