இராஜதுரை ஹஷான்
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமை (03) அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித கே ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்
வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையும். குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தபால் நிலையத்தை நாடவும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் இதர ஆவணங்களை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்துள்ளோம்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 60 ஆயிரம் பொதிகள் ஊடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றையதினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்.
தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் வியாழக்கிழமை (7) உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவுறுத்தப்படும். ஆகவே இக்காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தமது வதிவிட பகுதியில் உள்ள தபால் நிலையத்தை நாடி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2,090 தபால் அலுவலகங்கள்இன்று (03) திறக்கப்பட்டிருக்குமென சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்தார். விநியோகப் பணிகளில் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment