பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து வட, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக சந்தித்து பெரும்பாலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மையப்படுத்தி கலந்துரையாடி வருகின்றனர்.
இந்த சந்திப்புகளில் பிரஸ்தாப தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட கட்சியின் வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இடம்பெறுகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுமிருந்து பெரும்பாலும் ஒவ்வொரு தொகுதிகளையும், பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் கட்சித் தலைவரை வந்து சந்தித்த வண்ணமிருக்கின்றன.
கிழக்கிலும் அதற்கு வெளியிலும் இருந்து கொழும்பில் வந்து கட்சித் தலைவர் ஹக்கீமை சந்தித்துக் கலந்துரையாடியவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், உள்ளுராட்சி அமைப்புகளின் முன்னாள் உறுப்பினர்களும் பலரும் இருந்தனர்.
வட, கிழக்குக்கு வெளியில் இருந்து வந்து சந்தித்தவர்களில் குருநாகல், புத்தளம், வன்னி, களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (19) மாலையில் முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் நடந்த சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்திலும், வெளி மாகாணங்களிலிருந்தும் வந்த கட்சி ஆதரவாளர் அனேகர் கலந்து கொண்டனர்.
கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் உடனிருந்தார்.
பிந்திய அரசியல் நிலைமை குறித்து கட்சித் தலைவர் ஹக்கீம் அங்கு வந்திருந்த வேட்பாளர்களிடம் விளக்கமளித்தார்.
No comments:
Post a Comment