ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர் அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
முன்னதாக பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.
இதன் பின்னர் 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு அவரின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதனை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். ஏனைய எந்தவொரு உறுப்பினரின் பெயரும் முன்மொழியப்படவில்லை. இதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு அவர் ஏகமனதாக தெரிவானார்.
அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
சபாநாயகரின் உரையைதொடர்ந்து பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு மொஹமட் ரிஸ்வியின் பெயரை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்தார். அதனை அமைச்சர் சரோஜா போல்ராஜ் வழிமொழிந்தார். ஏனைய வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்படாத நிலையில் அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தார்.
புதிய சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்தார். புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரை சபாநாயகராக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். மக்களாணைக்கு தலை வணங்குகிறேன் : பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.
பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதினத்தை முழுமையாக பாதுகாப்பேன். சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
சபை முதல்வராக பிமல் ரத்நாயக்கவும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக நளிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்பட்டனர்.-
பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டார்.
இதன்பின்னர் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். உரை நிறைவடைந்ததும் அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment