புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுதலை செய்த மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கியுள்ள உயர் நீதிமன்றம், அந்த வழக்கின் பிரதிவாதிகள் தரப்புக்கு அழைப்பாணை விடுக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாமுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபர் தாக்கல் செய்த இரண்டு மேன் முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக தமது தீர்ப்பை வழங்கி ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஏகமனதான மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோத்தாகொட, குமுதினி விக்கிரமசிங்க, மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேக்கர ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மேற்படி மேன்முறையீட்டு மனுக்களுக்கான தீர்ப்பு அந்த நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேனவினால் வெளியிடப்பட்டது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தனி ஒருவரின் படுகொலையல்ல எனவும் பெருமளவிலான மக்கள் உயிரிழந்த சம்பவம் எனவும் இதன்போது நீதிபதிகள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய முக்கியமான சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதி அழைக்கப்படாமல், பிரதிவாதிகளை விடுதலை செய்யமுடியாது என்பது நீதிமன்றத்தின் கருத்து எனவும் மேல்நீதிமன்றத்தினால் பிரதிவாதி அழைக்கப்பட வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதிவாதி அழைக்கப்படாமல் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் வழங்கப்பட்டுள்ள வழக்குத் தீர்ப்பை நிராகரிப்பதாக அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த மேல் நீதிமன்ற வழக்கின் படி பிரதிவாதியை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமுக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
மேற்படி, மனுக்கள் சம்பந்தமான பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சார்பாக அவர்களின் சட்டத்தரணிகள் பல சந்தர்ப்பங்களில் விரிவாக விடயங்களை சமர்ப்பித்தனர்.
சட்டமா அதிபரின் சமர்ப்பணங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மனு மீதான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதுடன் நேற்று அந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment