சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன், கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவேன் - சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன், கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவேன் - சபாநாயகர்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் மேன்மை பொருந்திய தாபனமான பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை இயலுமான வகையில் பாதுகாப்பதுடன், அனைத்து உறுப்பினர்களினதும் உரிமைகளை பாதுகாத்து மிகவும் பொறுப்பு மிக்க சபாநாயகர் பதவியின் கடமைகளை நேர்மையான முறையில் நிறைவேற்றுவேன் என சபாநாயகர் அசோக ரன்வல சபைக்கு உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது கன்னி அமர்வின்போது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து சபைக்கு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அறிவித்ததாவது, மேன்மை பொருந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகராக என்னை நியமித்தமைக்கு உளப்பூர்வமாக நன்றியையும், கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்து செய்திகளையும் ஏற்றுக் கொள்வதுடன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராளுமன்றத்தின் ஆளும் மற்றும் எதிர்ப்பினர் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் மேன்மை பொருந்திய தாபனமான பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை இயலுமான வகையில் பாதுகாப்பதுடன், அனைத்து உறுப்பினர்களினதும் உரிமைகளை பாதுகாத்து மிகவும் பொறுப்பு மிக்க சபாநாயகர் பதவியின் பொறுப்பினை நேர்மையான முறையில் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

விசேடமாக சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் நாட்டின் அரசியலமைப்பின் ஏற்பாடுகள், நிலையியல் கட்டளைகள் மற்றும் முன்னாள் சபாநாயகர்கள் வழங்கியுள்ள பணிப்புக்கள், பாராளுமன்ற சம்பிரதாயங்களை முழுமையாக கடைப்பிடித்து, முன்மாதிரியான பாராளுமன்றத்தை தோற்றுவிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாச்சார மாற்றத்துடன், பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை வினைத்திறனான முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.

சட்டவாக்க செயற்பாடுகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மக்கள் எதிர்பார்க்கும் பாராளுமன்றத்தை உருவாக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment